Monday, February 8, 2010

தமிழருவி மணியன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள் பாகம் 2அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், சமகாலத்தில் உள்ளவர்களின் பெயரை அவர்களின் பதிலில் எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடம் கட்சியில் இருந்தால் போதும் ராக்கெட் வட்டியில் கடன் வாங்கி, காசு கொடுத்து எம்.பி சீட் வாங்கி விடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில், அங்காங்கு அரசியல் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் தமிழருவி மணியன்.

முதன் முதலில் தமிழருவி மணியன் பேசக் கேட்டது, 2007ஆம் ஆண்டு. அப்போது சென்னை சங்கமம் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஜீவா, புதுமைபித்தன், என்.எஸ்.கே நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடந்தது. புதுமைப்பித்தனைப் பற்றி எஸ்.ராவும், ஜீவா பற்றி தமிழருவியும் பேசினர். ஜீவாவைப் பற்றி அன்று அவர் பேசிய பேச்சு உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. இது க்ளிஷே ஆகத் தோன்றினாலும் அது தான் உண்மை. ஜீவாவைப் பற்றி படித்தும், கேட்டும் தெரிந்த எனக்கு, தமிழருவியின் உணர்வு பூர்வமான பேச்சு ஜீவா என்ற மனிதரை என் கண் முன்னே நிறுத்தியது. ஆனந்த விகடனில் அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும், இளைஞர்களை ஊக்குவிக்கும் கட்டுரைகளும் படித்த எனக்கு அவரின் பேச்சு எனக்கு அவர் மீது இருந்த மதிப்பை உயர்த்தியது.

1948 இல் பிறந்த மணியன் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது அரசியலில் ஈர்க்கப் பட்டார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காமராஜர் விருதுநகரில் தேர்தலில் நின்ற போது, அவரின் இலக்கியம் சார்ந்த அரசியல் பேச்சைக் கேட்ட காமராஜர் தமிழருவி என்ற பட்டத்தைக் கொடுத்தார். காமராஜரின் மறைவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரஸில் ஈடுபாடு கொண்டு அதில் இணைந்தார். ஸ்தாபன காங்கிரஸ் பின்னர் ஜனதாவாக உருவெடுத்தது. அங்கு அவர் புறக்கணிக்கப் பட இராமகிருஷ்ண ஹெக்டேவின் ‘லோக் சக்தி’யில் இணைந்தார்.

‘லோக் சக்தி’ பாரதிய ஜனதா அமைச்சரவையில் இடம்பெற அதை எதிர்த்து அதிலிருந்து விலகினார். மூப்பனாரின் மறைவுக்கு பின்னர் த.மா.க காங்கிரசில் இணைந்த பிற்பாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு திட்டக் குழுவின் உறுப்பினாரகவும் இருந்தார். 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடை கண்டித்து, திட்டக் குழு உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் உதறினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்திய அரசியல் இயக்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இயக்கத்தின் பெயரில் எனக்கு ஒரு அசுயை இருந்தாலும், அதன் கொள்கைகள் தான் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த இயக்கத்தில் இணைபவர்கள் எந்த காலத்திலும் சட்டமன்ற, பாராளுமன்ற ஏன் சாதாரண பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்கக் கூடாது. இதன் உப அமைப்பாக 'பஞ்சாயத்துக்கு பத்து பேர்' என்ற அமைப்பும் இயங்குகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்தில் ஒரு பத்து பேரைக் கொண்டு நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்பதே இந்த உப அமைப்பின் குறிக்கோள்.

ஒரு நடுநிலை அரசியல் விமர்சனாக செயல் படுவது, தமிழகத்தில் அதுவும் தற்போது உள்ள நிலையில் கத்தி முனையில் நடப்பதற்கு சமம். அப்படி இருக்கையில் அவர் அரசியல் கட்சிகளை மிகவும் வெளிப்படையாக விமர்சிப்பது, உண்மையில் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் செயல் படுகிறார். ஆன்மிகம் என்றால் பக்தி மார்க்கம் சார்ந்து அல்ல. அகம் சார்ந்த பகுத்தறிவு மிக்க ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து இயங்குகிறார். வேதாத்திரி மகரிஷி, புத்தர், வள்ளலார் போன்றவர்களைப் பற்றி அவர் ஆற்றிய உரைகள் அவரின் ஆன்மிக நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கின்றன.

அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். அவர் 2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு பொதுக் கூடத்தில் ஆற்றிய உரையை இங்கே அளித்துள்ளேன்:


அரசியலில் அதிலும் தமிழக அரசியலில் அப்பாவியாக இருக்கும் தமிழருவி மணியன், என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகளில் மிகவும் பிடித்தவராக ஆனதில் ஆச்சரியம் இல்லை.

பி.கு: இந்த பதிவு எல்லோருக்கும் சென்று சேர தமிழிசிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போடுங்கள்.

9 comments:

தாராபுரத்தான் said...

சிந்திக்க தெரிந்தவர்களுக்கு அரசியல் சரிப்படாது.உணர்வு உள்ளவர்களுக்கும் அரசியல் சரிப்படாது.உ.ம்..வை.கோ. ஆனால் இவர்கள் சேவை தமிழகத்திற்கு என்றும் தேவை.

பிரசன்னா இராசன் said...

வருகைக்கு நன்றி அய்யா. வை.கோவை நான் கண்டிப்பாக இந்த பட்டியலில் நான் இணைக்க விரும்பவில்லை. காரணம் அவர் எடுத்த முட்டாள்தனமான அரசியல் நிலைப்பாடுகள். தமிழருவி மணியன் அந்த வகையில் தனித்து தான் தெரிகிறார்...

ஜீவா ஓவியக்கூடம் said...

அரசியலின் அபூர்வமான மனிதரை பற்றி அருமையான கட்டுரை!!

பிரசன்னா இராசன் said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா சார்...

Prakash said...
This comment has been removed by the author.
Prakash said...

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் நிரந்தரமாக தங்கும் இடம் ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை எழுதி கிழிச்சாரு பாருங்க , காங்கிரஸ் காரர்களை இவர் விமர்சிப்பதை படிக்கும்போதே அவ்வளவு சுவையாக இருக்கும். உண்மை உணர்வாளர்.மிகச்சிறந்த பேச்சாளர்.

பிரசன்னா நீங்கள் ஜீவாவை பற்றி பொன்னீலன் அண்ணாச்சி பேசியதை கேட்கவேண்டும் அலாதியாக இருக்கும்.

பிரசன்னா இராசன் said...

@ ப்ரகாஷ்

இப்பவாவது விவகாரம் இல்லாம பின்னூட்டம் போட்டியே.

முன்பு ஒரு முறை பேசிய போது பொன்னீலனைப் பற்றித் தெரியாது என்று சொன்னேன் அல்லவா. பொன்னீலன் எழுதிய ஒன்றிரண்டு கதைகளை படித்துள்ளேன். அவற்றில் ஒன்று, அவர் குமுதம் ‘தீராநதி’யில் எழுதிய ‘ராம்,ராம்’. மிகச் சிறந்த எழுத்தாளர். முடிந்தால் அவரைப் பற்றி ஒரு பதிவு போடேன்...

kailash,hyderabad said...

மிக நல்ல மனிதர் இந்த காலத்தில் கூட

goma said...

தமிழுக்காகவே ,தமிழுக்கு மட்டுமே தமிழருவியின் நா வளையும்

Share